மதுரை, டிசம்பர் 27:
2026 தேர்தலில் கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது என்றும் கூட்டணிக்கு பாஜக நிா்பந்திக்கவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள மகாலில், அமமுக. செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் ரீதியாக எது நடந்தாலும், டி.டி.வி. தினகரனை தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். இதற்கிடையே செங்கோட்டையன், தவெகவுக்கு சென்றதற்கு நான் தூண்டிவிட்டதாக கூறினார்கள். ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு முடிவு எடுத்தார். அதனையும் நான் சொன்னதாக வதந்தியை பரப்பினார்கள்.
கூட்டணி அமைக்க அமமுகவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன. ஆனால், நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. தொண்டா்கள், நிா்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை அமைப்போம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என பாஜகவின் முன்னாள் தலைவா் அண்ணாமலை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இதுகுறித்தும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை உறுதியாக அமைப்போம்.