நெல்லை, ஜனவரி 30:
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,“திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகத் தந்து வருகிறார்கள்.”ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்கிற நம்பிக்கையோடுதான் மக்கள் மனுக்களைத் தருகிறார்கள். நிச்சயமாகப் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அவ்வாறு எந்தக் கட்சி வரும், யாரை இணைப்பது என்பதைப் பற்றிய முடிவை முதல்வர்தான் அறிவிப்பார். எந்தக் கருத்துக் கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் என்பது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது” என்று அவர் பேசினார்.