சென்னை, ஆகஸ்ட் 02:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற புதிய மருத்துவ முகாம் திட்டம் சென்னை சாந்தோம் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “நான் மருத்துவமனையில் இருந்த போதும் அரசு பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தேன். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதையும் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசினேன். எனது நலம் என்பது நாட்டு மக்களின் நலனே. மக்கள் நலனுக்காகவே செயல்படுவதே என் விருப்பம்,” என்று தெரிவித்தார்.
மேலும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததாகவும், அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக சுகாதார துறையில் பெரும் பணியாற்றினர். மேலும் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் பல திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாகவும், “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்திற்கு ஐ.நா. சபை விருது கிடைத்தது மிகவும் பெருமை எனவும் கூறினார்.
மக்களை நேரில் வந்து சந்தித்தால்தான் எனக்கு உற்சாகம் வருகிறது,” என்றும் கூறினார். மேலும் அரசின் அனைத்துத் திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு சென்று பயனளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.