அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 700-க்கும் அதிகமானோர் இந்த மோதலில் பலியானதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலை மட்டுமல்லாது மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள நாடுகளையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
போரின் முதல் நாளிலேயே அமெரிக்கா சுமார் 779 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6,900 கோடி) செலவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நீடித்தால், அமெரிக்காவிற்கு மொத்தம் 210 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 18.87 லட்சம் கோடி) வரை செலவாகும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் ராணுவ உதவிகளை சேர்த்துக் கணக்கிட்டால், இந்த செலவு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.