சென்னை, ஜூலை 7:
சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை பிர்லா பிளானடோரியம் அருகே ஐடி ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலரில் இன்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட பயணித்தவர்கள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் வாகனம் முழுவதும் தீயானது பரவி எரிய தொடங்கிய நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நந்தனம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். எந்தவித அசாம்பாவிதமும் ஏற்படவில்லை.
கோட்டூர்புரம் போலீசார் நடத்திய விசாரணையில், வாகன ஓட்டுனர் முருகன் என்பதும், சென்னை பெரம்பூரில் இருந்து டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு 15 ஊழியர்களை ஏற்றி செல்லும் போது விபத்து நிகழ்ந்துள்ளது. தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் அங்கு சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.