குஜராத், ஆகஸ்ட் 12:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் வரி முன்கூட்டியே இருந்த நிலையில் கூடுதலாக 25 சதவீத வரி உயர்த்தியதால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகின் முக்கிய வைர வணிகமையமாக விளங்கும் சூரத்தில் புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் வராமல் முழுமையாக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் வைர ஏற்றுமதி ஆர்டர்கள் டிரம்ப் அறிவிப்பால் நிறுத்தப்பட்டிருந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகை வர இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளதால், அது வரை அதிக அளவு வைர ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஆர்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பெரும் கவலையாகி உள்ளது.
2024-ஆம் ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த வைரங்களில் 68 சதவீதம் இந்தியாவிலிருந்து வந்ததாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள இஸ்ரேல் 28 சதவீதம் பகுதியைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெறும் 19 சதவீத வரி விதித்துள்ளதால், இஸ்ரேல் இந்தியாவுக்கு போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் வைர ஏற்றுமதி ஆர்டர்கள் 50 சதவீதமாக குறைந்துவிட்டது என்றும், அதன் காரணமாக உற்பத்தியும் 30-35 சதவீதம் குறைந்திருப்பதாகவும், புதிய அதிகளவிலான வரி விதிப்பால் சில நிறுவனங்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டு சரிவடைவார்கள் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வரி விதிப்பானது இந்திய வைர தொழிலுக்கு பெரும் ஆபத்து என்றும்,எதிர்கால சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனை இழக்கவைக்கும் அபாயங்களையும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.