மகாராஷ்டிர துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் சுநேத்ரா பவார்!

Sunetra Pawar takes charge as Deputy CM of Maharashtra!

மகாராஷ்டிரா, பிப்ரவரி 10:

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் சுநேத்ரா பவார் மாநில செயலக மந்திராலயாவில் தனது அமைச்சர் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து கடந்த ஜனவரி 31-ல் சுநேத்ரா பவார் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரது மூத்த மகன் பார்த் பவாரும் துணை முதலமைச்சர் அலுவலகத்தில் சுநேத்ரா பொறுப்பேற்றுக்கொண்டபோது உடனிருந்தனர். அதோடு, என்சிபி தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே, சாகன் புஜ்பால் தனஞ்சய் முண்டே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சுநேத்ரா பவார் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 23 பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.

சுநேத்ரா பவாருக்கு ஆட்சித்துறை, விளையாட்டு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும், பீட் மற்றும் புணேவின் பாதுகாவலர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக இன்று அதிகாலை புனேவிலிருந்து மும்பை வந்த சுநேத்ரா பவார், தாதர் பகுதியில் உள்ள சைத்யபூமியில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பி.ஆர். அம்பேத்கரின் நினைவிடத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

துணை முதலமைச்சர் சுநேத்ராவும், அவரது மூத்த மகனும் சேர்ந்து என்சிபி அலுவலகத்திற்குச் சென்று மந்திராலயத்திற்குச் செல்வதற்கு முன்பு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்தனர்.

அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற முதல் தேர்தலில், திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, அவரது கட்சி 73 இடங்களில் 51 இடங்களைப் பெற்று புனே ஜில்லா பரிஷத்தைத் தக்க வைத்துக்கொண்டது.

என்சிபி மற்றும் சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) ‘கடிகாரம்’ சின்னத்தில் இணைந்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு