திருப்பூர், ஆக்ஸ்ட் 02:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மாரிமுத்து என்பவர் அலுவலகத்தில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரி இருவரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பேருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பேருந்தை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலைத்தலைக்கீழ் பிரதேசம் பழங்குடியினத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் சிறுத்தைப் பல் ஒன்று காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடந்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து அதிகாலை 4.15 மணியளவில் வனச்சரக அலுவலக வளாகத்துக்குள்ளே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து உடுமலை போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மாரிமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாரிமுத்து சாவில் மர்மம் உள்ளது என்றும், அவரை அடித்துகொலை செய்து தூக்கில் தொங்க விட்டனர் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் உடலை வாங்க மறுத்தனர்.
இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை இரவு 7.45 மணி அளவில் உறவினர்கள் வாங்கி சென்று அடக்கம் செய்தனர். இந்த விவகாரத்தில் வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.