நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வேலைநிறுத்தம்!

Strike today on behalf of trade unions across the country!

சென்னை, பிப்ரவரி 12:

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏஐடியூசி பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறியதாவது, மத்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தேசிய நலன்களுக்கு எதிரான கொள்கைகளை முன்னெடுத்து, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறைகளில் சேவைகள் பாதிக்கப்படலாம். காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததை எதிர்த்து, அந்தத் துறையினரும் வேலைநிறுத்தத்தில் இணைகின்றனர். அதேபோல், போக்குவரத்து துறையில் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு நடைபெறும் போராட்டத்துக்கு தி.மு.க. தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றன. நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா மற்றும் அணுமின் உற்பத்தியில் தனியார் பங்குபற்றலை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவை தொழிற்சங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு