டெல்லி, நவம்பர் 3:
நாடு முழுவதும் தெருநாய்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்த வழக்கில், தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
நாடு முழுவதும் தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது உச்சநீதிமன்றம். மாநில அரசுகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் பதில் மனு தாக்கல் செய்யாததை கண்டித்த நீதிமன்றம், எந்த மாநிலத்தின் தலைமைச் செயலருக்கும் ஆஜராகாத விலக்கு இல்லை என கடுமையாக எச்சரித்தது.
இதற்கிடையில், காணொலிக் காட்சியின் மூலம் ஆஜராக அனுமதி கோரிய மாநிலங்களின் வேண்டுகோளை நீதிமன்றம் மறுத்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் தலைமைச் செயலர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது, சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா “மாநில தலைமைச் செயலர்கள் காணொலிக் காட்சி வழியாக ஆஜராக அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலாக நீதிபதி விக்ரம் நாத், “மாநகராட்சி நிர்வாகங்களும் மாநில அரசுகளும் சரிசெய்ய வேண்டிய பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாதது துரதிருஷ்டவசமானது. நாய்க்கடி பிரச்சனையைத் தீர்க்க நாடாளுமன்றமே சட்டம் இயற்றியிருந்தாலும், நடைமுறை எந்த மாநிலத்திலும் பின்பற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிக்காத நிலை தொடர்கிறது,” என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.
மேலும், பதில் மனு தாக்கல் செய்யுமாறு மீண்டும் உத்தரவிட்டும் சில மாநில அரசுகள் அதனை புறக்கணித்ததைக் குறிப்பிட்ட நீதிபதிகள், அனைத்து மாநிலத்தலைமைச் செயலர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெளிவுபடுத்தினர்.
அதன்படி, மேற்கு வங்காளம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி மாநிலங்கள் மட்டுமே இதுவரை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றம் பதிவு செய்தது. மற்ற மாநிலங்களின் தலைமைச்செயலர்கள் உடனடியாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் முன்உத்தரவை உறுதிப்படுத்தியது.
தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க மாநில அரசுகள் முழுமையான நடைமுறைகளை மேற்கொள்ளாததையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. இந்த விவகாரம் தொடர்பான மேலான விசாரணை அடுத்த வாரம் மீண்டும் நடைபெற உள்ளது.