சென்னை, ஆகஸ்ட் 07:
தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை தொடர்பான பணிகள் வெகு காலமாக தீவிரமாக நடைபெற்று வந்தது. 2022-ஆம் ஆண்டில், ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 14 பேர் கொண்ட உயர் குழு இந்த கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் 650 பக்கங்கள் கொண்ட அந்த கல்விக்கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நீக்க வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் பயிற்று மொழியாக செயல்பட வேண்டும், நீட் தேர்வை நிராகரித்து, அதற்கான பயிற்சி மையங்களின் விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்பன அடங்கிய முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியை முதன்மையான மொழியாக நிலைநிறுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் தமிழக மாணவர்கள் மொழி மற்றும் கல்வி முறையில் மாநில உரிமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை தமிழகத்தின் புதிய மாநில கல்விக் கொள்கையை உரிய முறையில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.