ராமேஸ்வரம், ஜூலை 29:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இப்போது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், வழக்கம்போல் விசைப்படகில் கடலுக்குச் சென்றபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இலங்கை கடற்படை ரோந்து மேற்கொண்டு, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 9 பேரையும் கைது செய்தது. அதோடு, அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, ஏற்கனவே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவ அமைப்புகள்,மத்திய மற்றும் தமிழக அரசுகள் உடனடியாக தலையிட்டு, கைதான மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்புற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.