ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

Special voter revision is new weapon to destroy democracy: Rahul Gandhi

டெல்லி, நவம்பர் 05:

ஹரியாணா தேர்தலில் நடைபெற்றது வெறும் வாக்குத் திருட்டு அல்ல, ஆட்சித் திருட்டு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், “வாக்காளர் பட்டியலில் செய்யப்படும் தீவிர திருத்தம் (Intensive Revision) என்பது ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது” என கூறினார்.

“ஹரியாணாவில் ஒரே நபர் ஒரே வாக்குச் சாவடியில் 18 முறை வாக்களித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பதாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த சஷாகிரி என்ற நபர் ஒரே இடத்தில் 14 முறை வாக்களித்தார். ஒரே நபர் பல்வேறு பெயர்களிலும் அடையாள அட்டைகளிலும் வாக்களித்த பல நிகழ்வுகள் வெளிச்சம் பார்த்துள்ளன,” என அவர் தெரிவித்தார்.

ஹரியாணா தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் வெளியிட்ட ராகுல், “இத்தகைய நீளமான முறைகேடுகளின் காரணமாகவே தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வெளியிடவில்லை” என்றும் கூறினார்.

“ஒரு வீட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், ஹரியாணாவில் ஒரு வீட்டு முகவரியில் 66, 100, 500 பேர் என வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த முகவரியில் ஒரே ஒரு அறை மட்டுமே இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார் ராகுல்.

மேலும், “ஒரே நபர் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியாணாவிலும் வாக்களித்திருக்கிறார். வாக்காளர் பட்டியலில் ‘0’ என்ற முகவரியுடன் பலர் பதிவாகியுள்ளனர். இது தவறுதலாக நிகழ்ந்தது அல்ல. இவர்கள் வீடில்லாதவர்கள் அல்ல என்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறேன்,” என்று கூறி புகைப்படங்களையும் வெளியிட்டார்.

ஒரு வீடு எனக் குறிப்பிடப்படும் இடத்தில் 500 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து அவர், “அந்த முகவரியில் நிஜமாக அந்த 500 பேர் இருக்கிறார்களா? அல்லது பெயரளவில்தான் உள்ளனரா? என்பதை ஒருபோதும் உறுதி செய்ய முடியாது” என வினவினார்.

ஹரியாணா தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்த இந்த அனைத்து ஆதாரங்களும் தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளிலிருந்தே எடுக்கப்பட்டவை என்று ராகுல் வலியுறுத்தினார்.

மேலும் அவர், “அடுத்ததாக பிகாரில் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு அங்கும் நடக்கும் வாக்குத் திருட்டு, போலி வாக்காளர்கள் சம்பவங்கள் பற்றிய ஆதாரங்களையும் வெளிப்படுத்தப் போகிறேன். வாக்குத் திருட்டில் ஈடுபடும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்களின் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்கள்” என கடுமையாக விமர்சித்தார்.

Related posts

திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த இறுதி முடிவு கார்கேவிடம் ஒப்படைப்பு

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்