சென்னை, அக்டோபர் 16:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதற்கு முன்பாக 2 லட்சத்துக்கும் மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள்.
வரும் அக்டோபர் 20-நாள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிகழ்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கணக்கிலிட்டு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுக்கு கூடிய 760 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற ஊர்களிலிருந்து பல பகுதிகளுக்கு 565 சிறப்புப் பேருந்துகள் சேவைகளை வழங்க உள்ளன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 275 சிறப்பு பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து செயலி டிஎன்எஸ்டிசி மற்றும் இணையதளம் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வியாழக்கிழமை சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்து இயக்கம் குறித்து 9445014436 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு காவல்துறை போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லலாம்.
அரசுப் பேருந்துகளில் மக்கள் இடையூறின்றி பயணிக்கும் வகையில் விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட குழுக்குள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், 044-24749002, 044-2628 0445, 044-26281611 எண்களிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.