சென்னை, ஜூலை 10:
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த விதிமுறைகளை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடியுரிமை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் விதிமுறையை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த விதிமுறைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருப்பதை சுட்டிக்காட்டி உள்ள திருமாவளவன், இந்த விதிமுறை தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். அப்படி செயல்படுத்தப்பட்டால் சாதாரண மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு விதிமுறைகள் இருக்கும்போது புதிய ஆவணங்கள் கேட்பது தேவையற்றது. எனவே அரசியல் சாசனத்துக்கு எதிரான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.