சென்னை, டிசம்பர் 03:
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், ரயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில்களுக்குள்ளோ அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.