சென்னை, பிப்ரவரி 05:
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் பத்திரிகையாளர்கள் நலன் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.
களத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாதுகாப்பு, சமூக மற்றும் பொருளாதார நலன் ஆகியவை குறித்து யூனியன் நிர்வாகிகள் விரிவாக எடுத்துரைத்தனர். பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில், யூனியன் நிர்வாகிகள் மட்டுமன்றி, பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களும் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
- களத்தில் செயல்படும் பத்திரிகை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட செய்திப் பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் அரசு சார்பில் மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் வழங்கப்பட வேண்டும்.
- பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கென அனைத்து வகை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் தனி மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட வேண்டும்.
- பத்திரிகை நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டத்தை அரசு விரைந்து இயற்ற வேண்டும்.
- பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டி வழங்க வேண்டும்.
- இதுவரை அச்சு ஊடகத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் பென்ஷன் வசதியை, காட்சி ஊடகத்தில் பணியாற்றியவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
- அரசால் வழங்கப்படும் அரசு அங்கீகார அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
- தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பணியாற்றி வரும் புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் முறையாக கிடைக்கவில்லை. அவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- அரசு சார்பில் தற்போது 70 பேருக்கு மட்டுமே குறைந்த வாடகை அடிப்படையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் தொடங்கப்பட்டதிலிருந்து 1 சதவீதம் பேருக்கே வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் இதனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பத்திரிகை நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் மிகக் குறைந்த உதவித் தொகை (₹500, ₹1000) உயர்த்தி வழங்க வேண்டும்.
- பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டு மனைகளை அரசு வழங்க வேண்டும். பிற மாவட்ட செய்தியாளர்களுக்கு கிடைப்பது போல, சென்னை தலைமைச் செயலகம், காவல்துறை, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய பீடங்களை செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
- முக்கிய நிகழ்ச்சிகளை செய்தி சேகரிக்கச் செல்லும் போது, காவல்துறையினரால் புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னை அல்லது அதன் அருகிலுள்ள மாவட்டங்களில், பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கான ரயில் பயண சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கு தற்போது விழுப்புரம் கோட்டத்தில் மட்டுமே வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து சேவையை, பிற கோட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
- சுங்ககட்டணங்களில் இருந்து பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
- அரசு நிகழ்ச்சிகளில் பெண் பத்திரிகையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
- அரசு நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்களை கண்ணியக் குறைவாக நடத்தும் சம்பவங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
மேலும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வரும் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியின் ஒரு பகுதியாக, பல்வேறு இயக்கங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் திமுக தேர்தல் அறிக்கை குழுவினர் கருத்துகளை கேட்டறிந்து வருவது குறிப்பிடத்தக்கது.