நேபாளம், செப்டம்பர் 08 :
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
சமூக ஊடக நிறுவனங்களின் பதிவுக்கான அவகாச காலம் ஆகஸ்ட் 28-இல் முடிந்தபோதிலும், மெட்டா (பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட், லிங்க்ட்இன் போன்ற பொது பிரபல தளங்கள் பதிவு செய்ய விண்ணப்பிக்காமல் இருப்பதால், நேபாள அரசு இவற்றுக்கு தடை விதித்துள்ளது. எனினும், அவகாச காலம் கழித்து இதுவரை எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை.
இதையடுத்து உத்தரவாக பதிவு செய்யப்படாத 26 சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து நாடு முழுவதும், குறிப்பாக தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க கருத்துச் சுதந்திரத்தை குறைத்துவருவதாக இளைஞர்கள் முழக்கமிட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் நேபாள பாராளுமன்றத்தை சூழ்ந்ததால் தலைநகரில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.