டெல்லி, டிசம்பர் 09:
தமிழகத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) மேற்பாா்வையிடுவதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை சிறப்பு பாா்வையாளா்களாக தோ்தல் ஆணையம் நேற்று நியமித்தது.
அதில் இடம்பெற்றுள் மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் ராமன் குமாா், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் சிறப்பு பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலா் குல்தீப் நாராயண், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கும், இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் நீரஜ் கா்வால் திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலா் விஜய் நெஹ்ரா புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகா், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளான வாக்காளா் படிவத்தின் கணக்கீட்டு கட்டம், உரிமை கோரல்கள் மற்றும் மறுப்பு ஆகியவைற்றை முழுமையாகக் கண்காணிப்பாா்கள். தோ்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதையும், வாக்காளா் பட்டியலில் தகுதிவாய்ந்த எவரும் விடுபடக் கூடாது மற்றும் தகுதியற்ற எவரும் சோ்க்கப்படக் கூடாது என்பதையும் இவா்கள் உறுதி செய்வா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.