பத்திரிகையாளர்கள் மீது தொடரும் அடக்குமுறைகள்: SIJU கண்டனம்

SIJU condemns police attacking on journalists

சென்னை, செப்டம்பர் 04:

பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ச்சியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் மீதான தொடர் அடக்குமுறைகளை மேற்கொண்டு வரும் காவல் துறையினரின் அடாவடி செயலை தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் வன்மையாக கண்டிக்கிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் மே தின பூங்காவில் பேச்சுவார்த்தைக்காக ஒன்று கூடிய பொழுது காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.

இதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், ஊடக ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை வலுகட்டாயமாக இழுத்து காவல்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிக மோசமான அணுகுமுறையை காவல் துறையினர் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது கையாண்டு வருகிறது. செய்தி களத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட புரிதல்களை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். நாளுக்கு நாள் இது போன்று அதிகரித்து வரும் சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.

எனவே தமிழக முதல்வர், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் போதிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கேட்டுகொள்கிறது.” என அறிக்கையில் தெவிரிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை