சென்னை, அக்டோபர் 31:
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பரபரப்புக்கு மத்தியில், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பசும்பொனில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அந்த நிகழ்வில் மூவரும் ஒரே மேடையில் தோன்றியதைத் தொடர்ந்து, அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து இன்று வெளியிட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செங்கோட்டையன் செயல்பட்டு வந்துள்ளார். கட்சியின் ஒழுங்குமுறை மற்றும் சட்ட நடைமுறைகளை மீறி, நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, கட்சியின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் நடந்துகொண்டுள்ளார். இதனால் கழகத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே செங்கோட்டையனை, இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குகிறேன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே செங்கோட்டையனை அனைத்து கட்சி பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருந்த அதிமுக தலைமை, இப்போது முழுமையாக கட்சியிலிருந்தும் வெளியேற்றியுள்ளது.
கட்சி முடிவை முன்னதாகவே எதிர்பார்த்திருந்த செங்கோட்டையன், பசும்பொன் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம், “என்னை அதிமுகவிலிருந்து நீக்கினால் மகிழ்ச்சிதான், அடுத்தகட்ட ஆலோசனையில் இதுகுறித்து தெரிவிக்கிறேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.