சென்னை, ஆகஸ்ட் 16:
சென்னை வளசரவாக்கத்தில் அமைந்த உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், சீமான் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தனித்து களம் கண்டு வருகிறோம். திரும்பத் திரும்ப இது போன்ற கேள்வியை நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் எனக்கு ஒரே மனைவிதான் ஒரே மனைவிதான் என்று திரும்பத் திரும்ப உங்களிடமும் சொல்ல வேண்டி உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே சந்திக்க உள்ளது. இதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது பற்றி கேட்கிறீர்கள்.
மற்றவர்களின் பலவீனத்தை நம்பி நாங்கள் இல்லை. எங்களது பலத்தையும் வலிமையையும் நம்பியே களத்தில் இருக்கிறோம். நிச்சயம் தமிழகத்தில் தூய்மையான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நம்பிக்கையோடு தேர்தலில் போட்டியிடுகிறோம். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள்.
முக்கியமாக, பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஏற்கனவே நாங்கள் கூறி வந்த தற்சார்பு பொருளாதாரத்தை தொடர போவதாக பிரதமர் கூறியிருக்கிறார். மீதமுள்ள 3½ ஆண்டுகளும் அதனை அவர் தவறாமல் பின்பற்றி செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாகி விட்டதாக கவர்னர் கூறியிருப்பதற்கு கனிமொழி எம்.பி. மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருவர் சொல்வதையும் கேட்டுக்கொண்டு அவர்களை ஒழிப்பதற்கான வேலையில் நாங்கள் ஈடுபட இருக்கிறோம். தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.