கடலூர், ஜூலை 16:
கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கிராசிங்கில் கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கேட் கீப்பராக பணியாற்றிய பங்கஜ் சர்மா, விதிகளை மீறிச் செயல்பட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவதன்று, தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கிராசிங் வழியாக கடந்து செல்ல முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதி, சாருமதி (16), செழியன் (15), நிமிலேஷ் (12) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் மூவர் காயமடைந்தனர். விபத்தின் போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை திறந்துவிட்டதாகவும், அவர் மீது பள்ளி வேன் டிரைவரின் கோரிக்கையின்படியே செய்ததாக தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், அவர் விதியை மீறியதன் காரணமாக உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பின்னர், ரயில்வே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சம்பவம் குறித்த முறையான விசாரணைக்காக தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழு அமைத்து, கேட் கீப்பர், பள்ளி வேன் ஓட்டுனர் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை சமீபத்தில் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: “கடந்த 8-ந்தேதி ஆலப்பாக்கம் ரயில் நிலைய மேலாளரிடம் இருந்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவுக்கு அழைப்பு சென்றது உறுதி செய்யப்பட்டது. அப்போது ரயில் கடப்பதற்கு முன்பு வழங்கப்படும் ரகசிய குறியீட்டு எண் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜ் சர்மா தொடர்ச்சியாக 3 நாட்கள் பணியில் இருந்துள்ளார். ரயில்கள் வரும் நேரங்களில் அவர் ரயில்வே கேட்டை அடைக்காமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையின் அடிப்படையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரயில்வே தரப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.