சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

Sardar Vallabhbhai Patel's birth anniversary: ​​PM Modi pays tribute

குஜராத், அக்டோபர் 31:

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் “இரும்பு மனிதர்” என்றும் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் அமைந்துள்ள 182 மீட்டர் உயர சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை நாள் என அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டின் விழா, படேலின் சமூக ஒற்றுமையும் தேசிய ஒருங்கிணைப்புக்கான பங்களிப்பையும் போற்றும் வகையில், நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பசுமை வளாகம் ஆன ஏக்தாநகர் பகுதியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி தேசிய ஒற்றுமை உறுதிமொழியை ஏற்பதுடன், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் மற்றும் பல மாநில காவல் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, “சர்தார் படேல் இந்திய ஒன்றிப்பின் சின்னம். அவரது உறுதியும் நம்பிக்கையும் தான் இன்று இந்தியாவின் ஒற்றுமை கட்டுமானமாக விளங்குகிறது,” என்று கூறினார்.

இதற்கிடையில், தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சர்தார் படேலின் நினைவாக 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழாவிலும் கலாசார நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான ஒற்றுமை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சமூக லைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் ஒருங்கிணைப்புக்குப் பின்னால் இருந்த உந்து சக்தியாக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார், இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி ஆண்டுகளில் நாட்டின் விதியை வடிவமைத்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது.
சர்தார் படேலின் ஒன்றுபட்ட, வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவதற்கான கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

கேரளாவுக்கு ஒரு நீதி..மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா? மம்தா பானர்ஜி ஆதங்கம்

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு