சென்னை, ஜூலை 10:
திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நவீன் பொல்லினேனி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் பிரிட்டானியா நகர் 1-வது தெருவில், நவீன் பொல்லினேனி (37) என்பவர் வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பிரபல திருமலா பால் நிறுவனத்தின், Treasury manager -ஆக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பால் நிறுவனத்தில் இருந்து ரூபாய் 44.5 கோடியை கையாடல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள், கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து, கையாடல் செய்த தொகையை திருப்பி கொடுப்பதாக எழுத்துப் பூர்வ கடிதம் ஒன்றை நவீன் பொல்லினேனி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், பணத்தை திருப்பிச் செலுத்தாவிட்டால் சிறைக்கு அனுப்பும் நிலை ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், திருமலா நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி, சென்னை புழலில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நவீனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.