தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, இந்த தேர்தலை நடத்த ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேபோல், மாநிலம் முழுவதும் 3,302 பதற்றம் நிறைந்த பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.462 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல், 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தல் பணிகளுக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும், இதுவரை 85 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

