“ஆப் இருந்தால் போதும்! சைக்கிள் முதல் ஆடி கார் வரை சுலப வாடகை”

rent-any-vehicle-in-germany-using-app

ஜெர்மனி, நவம்பர் 08:

ஜெர்மனியில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் சிறப்பாக இருந்தாலும், நகரவாசிகள் மத்தியில் இப்போது செயலி (மொபைல் ஆப்) மூலம் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் முறை பிரபலமாகி வருகிறது. சைக்கிள்கள், மின்சார ஸ்கூட்டர்கள், மற்றும் சாதாரண கார்கள் முதல் உயர்தர கார்கள் BMW, Mercedes, Audi, Volkswagen வரை தேவைக்கேற்ப வாடகைக்குக் கிடைப்பதுதான் இதன் சிறப்பு. ஒரு சில யூரோக்களில், அதாவது இந்திய மதிப்பில் சுமார் சில நூறு ரூபாய்க்குள் உயர்தரக் கார்களை வாடகைக்கு எடுக்க முடியும்.

Miles, ShareNow, Bolt, Voi போன்ற நிறுவனங்கள் இந்த ‘பகிர்வுப் போக்குவரத்துச்’ (Shared Mobility) சேவைகளை வழங்குகின்றன. இந்த முறையின் வெற்றிக்கு முக்கியக் காரணம், அதன் எளிமைதான். சம்பந்தப்பட்ட ஆப்-ஐ பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து, ஓட்டுநர் உரிமம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை ஒருமுறைப் பதிவு செய்தால் போதும்.

இவை ‘எங்கு வேண்டுமானாலும் எடுக்கலாம், எங்கு வேண்டுமானாலும் விடலாம்’ என்ற முறையில் இயங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட சேவைப் பகுதிக்குள் (Business Area) நீங்கள் எங்கு பார்த்தாலும் இந்த வாகனங்களை எடுக்கலாம், அதே இடத்திலோ, அல்லது வேறு நகரத்தில் உள்ள சேவைப் பகுதிக்குள்ளோ எங்கு வேண்டுமானாலும் விட்டுவிடலாம். இது, வாகனத்தை மீண்டும் எடுத்த இடத்திலேயே விட வேண்டிய கட்டாயத்தை நீக்குகிறது.

குறுகிய தூரத்துக்கு ஸ்கூட்டர் அல்லது சைக்கிள்; நீண்ட அல்லது வசதியான பயணத்துக்கு செடான் (Sedan) அல்லது எஸ்.யூ.வி (SUV) கார் எனத் தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. கட்டணம் நிமிடக் கணக்கிலோ அல்லது தூரக் கணக்கிலோ வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங், எரிபொருள் போன்ற செலவுகளைச் நிறுவனங்களே ஏற்பதால், சொந்தக் கார் வைப்பதை விடச் சிக்கனம்.

சிறந்த பொதுப் போக்குவரத்து வசதி இருந்தும், ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்லவோ, அல்லது அவசரத் தேவைக்கோ இந்த ஆப் அடிப்படையிலான வாடகை முறை ‘கடைசி மைல் இணைப்பை’ (Last Mile Connectivity) வழங்குகிறது. இது நேரத்தையும், காத்திருப்பதையும் குறைக்கிறது. சொந்தமாக வாகனம் வாங்குவதைத் தவிர்க்க விரும்புவோருக்கு, தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்த இந்த முறை ஒரு சிறந்த போக்குவரத்துத் தீர்வாக ஜெர்மனியில் வளர்ந்து வருகிறது.

– கலைவாசன்

Related posts

“குப்பை மந்திரம்” எந்தக் குப்பை எந்த நிறம்?

தொண்டர்கள் புடைச்சூழ, வேலுடன் மரக்கடை பகுதிக்கு வந்த விஜய்

கொடைக்கானலில் இனி எல்லாருக்கும் ஒரே நுழைவுக் கட்டணம் தான்!