சென்னை, செப்டம்பர் 20:
பா.ம.க. வின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு தெரிவித்ததன்படி, அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவின் தீர்மானங்களை தேசிய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவராகவே தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் டாக்குமென்ட்களில் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அன்புமணி ராமதாஸுக்கே வழங்கப்பட்டுவிட்டது.
இதற்குப்பிறகு, ராமதாஸ் தரப்பின் ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர் மற்றும் சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தேர்தல் ஆணையரை சந்தித்து விவாதித்து, பா.ம.க. தலைவராக ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர் என எடுத்துரைத்தனர். அதே சமயம், கட்சியின் மாம்பழச்சின்னம் ராமதாஸ் தரப்புக்கு மட்டும் சொந்தமானதாகும் என்றும் தெரிவித்தனர்.
ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியிருந்தாலும், அவை மறைக்கப்படுவதாகவும், போலியான ஆவணங்களை அன்புமணி தரப்பில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை குறித்து, தேர்தல் ஆணையம் நியாயமான முடிவை எடுக்காவிட்டால், ராமதாஸ் தரப்பு நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் மன்றங்கள் மூலம் சட்டப் போராட்டங்களை தொடர்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், பா.ம.க. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நிறுவன தலைவர் ராமதாஸ் தரப்பு தீவிரமாக செயல்படுவதாகவும், அதனடிப்படையில் அன்புமணி தரப்பின் பொதுக்குழு அங்கீகரிக்கப்பட்ட காரணமாக, ராமதாஸ் ஓரிரு வாரங்களில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.