சென்னை, அக்டோபர் 06:
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் ராமதாஸை சந்தித்தார். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ், மருத்துவர்களின் பரிசோதனைகளால் முழுமையான ஆரோக்கியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ராமதாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர். மாதம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் உடல்நிலையில் சிறிய மாற்றத்தை உணர்ந்த மருத்துவர் அய்யா, நேற்று மாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர். அதன்பேரில் ராமதாசுக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பரிசோதனையில் மருத்துவர் அய்யா உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார்; மருத்துவர்கள் ஆரோக்கியமுடன் உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளார்கள். நாளை வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்களுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். டாக்டர் ராமதாசை பார்க்க யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம். அய்யா நலமுடன் உள்ளார்; தைரியமாக இருங்கள் என்று அவர் தெரிவித்தார்.