விழுப்புரம், ஆகஸ்ட் 18:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
கட்சிக்கும், டாக்டர் ராமதாஸூக்கும் எதிராக செயல்பட்டதாகவும், ராமதாஸின் இருக்கையில் ஒட்டு கேட்புக் கருவி பொருத்தியதாகவும், அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலியை வைத்து ராமதாஸை அவமானப்படுத்தியதாகவும், மக்கள் தொலைக்காட்சியின் மேலாண்மையை கைப்பற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் அறிவித்தார். அப்படி பதில் அளிக்காத பட்சத்தில், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க குழுவுக்கு உத்தரவளிக்கப்பட்டது.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் மீதான புகார்கள் தொடர்பாக முடிவு எடுக்க, இன்று தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவினருடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர வருகிற 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.