திருவள்ளூர், செப் 01:
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய பாஜக அரசு ஒப்படைக்க மறுப்பதை கண்டித்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் துவங்கினார்.
இந்த போராட்டத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் முதலில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்குள் வைத்துள்ளார்.
மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட சசிகாந்தை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போராட்டத்தை உடனே முடிக்குமாறு, மேலும் எதிர்காலத்தில் பல போராட்டங்களை நடத்த வேண்டிய பொறுப்பும் இருப்பதால் உடல் நலம் முக்கியம் என மருத்துவர்களின் அறிவுரையை ஏற்குமாறு வலியுறுத்தினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சசிகாந்த் செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.