சென்னை, ஜூலை 18:
தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மதுபான பழக்கத்திற்கு அதிகமாக இழுக்கப்படுகின்றனர் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் காரணமாக சமூகத்தில் பலவகை குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி.கே.வாசன், “தமிழக அரசு இனியும் கால தாமதமின்றி, மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். ஏழை மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என்று அனைத்து தரப்பு மக்களும் மதுவால் பாதிக்கப்படுவதை தடுக்க இதுவே ஒரே வழி” என்றார்.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு மதுபான பயன்பாடுதான் முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து, சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் மதுபானங்கள் காரணமாகவே நடைபெறுகின்றன என்றும், தமிழக அரசு மக்கள் நலம் குறித்து அக்கறை கொண்டிருப்பதாக உணர வேண்டுமென்றும், மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.