சென்னை, ஆகஸ்ட் 16:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியிலுள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 6 மணிக்கு 10 பேர் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் அவர் சொந்தமான இடங்களில் சோதனைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில், எம்.எல்.ஏ. விடுதிக்குள் அத்துமீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அமலாக்கத்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகவும், முந்தைய அமைச்சரவைகளில் கூட்டுறவு மற்றும் வருவாய் துறை பொறுப்புகளிலும் பணியாற்றிய முன்னணி தலைவராகவும் உள்ளார்.