மதுரை, ஜூலை 21:
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதையடுத்து, மாநாட்டிற்கான அனுமதி மற்றும் போலீசார் பாதுகாப்பு கோரி தவெக சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை தொடர்ந்து, மதுரை காவல்துறை கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டைப்போலவே, தற்போது நடைபெறும் இரண்டாவது மாநாட்டிற்கு பல்வேறு அம்சங்களைப் பற்றி தெளிவான விளக்கம் கோரி, 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை தவெக கட்சியிடம் எழுப்பியுள்ளது.
கேள்விகளில் மாநாடு நடைபெறும் நேரம் மற்றும் முடியும் நேரம், மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளர் யார், மேடையின் அளவு என்ன, பங்கேற்பாளர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் வாயில்கள், மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் உள்ளதா உள்ளிட்ட விவரங்கள் இதில் அடங்கும். மாநாட்டு அனுமதிக்கான மறுப்பு அல்லது அனுமதிக்கும் முன்னதாக தேவையான அனைத்து தகவல்களையும் முழுமையாக அளிக்குமாறு, தவெக கட்சி தலைமையிடம் மதுரை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.