சென்னை, பிப்ரவரி 02:
அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக யாருக்கு? என்று ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி, அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘அன்புமணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டது. ஆனால், பாமக தலைவர் என்று போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்குதான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்.
எனவே, அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். என் முகவரிக்கு கடிதத்தை அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.