விழுப்புரம், ஜூலை 24:
பட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைமையகம் இனிமேல் சென்னையில் இல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தின் தைலாபுரத்தில் இயங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவின் தலைமை அலுவலகம் தைலாபுரம் இல்லத்தில்தான் செயல்படுவதாகவும், சென்னையிலோ வேறு இடங்களிலோ அலுவலகம் இருந்தால் அது சட்டத்திற்கு புறம்பாக கருதப்படும் என்றும் கூறினார்.
பனையூரில் தலைமையகம் என்று தகவல் பரப்புவது மற்றும் தானாகவே நிர்வாகிகளை நியமித்துக் கொண்டு ஆட்சி செய்வது சட்டவிரோதமானது என்றும் ராமதாஸ் தெரிவித்தார். “கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனே பாமக-வில் இருந்து நீக்கப்படுவார்கள்,” என்றார்.
மேலும், கட்சியின் சிறப்பு பொதுக்குழு முடிவுப்படி, அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும், தன்னை தவிர யாரும் ‘தலைவர்’ என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைச் செய்தார். “மே மாதம் முதல், பா.ம.க. தலைவர் – ராமதாஸ், கவுரவ தலைவர் – ஜி.கே.மணி, செயல் தலைவர் – அன்புமணி என பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
சிலர் பாமக-வை உரிமையாக்க முயற்சி செய்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பாமகக் கொடியையும், தனது பெயரையும் யாரும் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். “அன்புமணியின் நடைபயணம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கிளப்பும் அபாயம் இருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
மேலும் கட்சியில் ஒற்றுமையை வலியுறுத்தியும், சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்காதீர்கள் என்றும் ராமதாஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.