அயோத்தி, நவம்பர் 25:
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 191 அடி உயர பிரதான கோபுரத்தின் உச்சியில் காவிக்கொடியை ஏற்றி வைத்தார்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமர் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட சிறப்புக் காவிக்கொடி பிரதமரால் ஏற்றப்பட்டது. இது 42 அடி உயர கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
முக்கோண வடிவில் அமைந்துள்ள அந்தக் கொடியில் ஒளிரும் சூரியன், ஓம், மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கொடி, ஸ்ரீராமரின் வீரத்தையும் பெருமையையும் வெளிப்படுத்துவதுடன், கண்ணியம், ஒற்றுமை மற்றும் கலாசாரத் தொடர் ஆகியவற்றையும் குறிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்தி வந்த பிரதமர் மோடியை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமானநிலையத்தில் வரவேற்றார். அதன்பின், சாலைவழியாக கோயிலுக்கு பயணித்த பிரதமர், இருபுறமும் திரண்டிருந்த பக்தர்களுக்கு கையசைத்து வரவேற்பு தெரிவித்தார்.
பின்னர், சேஷாவதாரர் கோயில், அன்னபூர்ணி தேவி கோயில், சப்த மந்திர் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் தரிசனம் செய்தார். அதன் பின் ராமர் கோயிலில் மூலவான ஸ்ரீபாலராமரை வழிபட்டு, ராம தாபாரில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சி, விவாஹ பஞ்சமி தினத்தையொட்டி நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். அழைப்பிதழ் வழங்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களால், பொதுமக்களின் வழக்கமான தரிசனம் இன்றைய தினம் நிறுத்தப்பட்டது. விழா முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
பக்தர்கள் விழாவைக் காண, ராமஜென்மபூமி வளாகத்தில் 200 அடி அகல ‘எல்இடி’ திரையும், நகரம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பெரிய திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.