கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Petrol bombs were thrown at truck carrying mineral resources!

தென்காசி, ஜனவரி 27:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.‌

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன.

இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கனிம வளங்கள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. பெரும்பாலான லாரிகள் கிராமப்புறங்கள் வழியாகச் செல்வதால் கிராம சாலைகள் சேதமடைந்து வருவதாக பல ஆண்டுகளாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.‌

இந்த நிலையில், மருதம்புத்தூரில் உள்ள கல் குவாரி ஒன்றில் இருந்து நள்ளிரவில் கேரளத்திற்கு கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது, அதனை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் லாரி ஓட்டுநர் செங்கோட்டை நாராயணசாமி மகன் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தார்.

ஆலங்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர். காயமடைந்த சுப்பிரமணியன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை