உலகம் முழுவதும் பெரியாரின் சிந்தனைகள் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Periyar's thoughts spread all over the world: CM Stalin

இங்கிலாந்து, செப்டம்பர் 05:

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது, பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்போது புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.கழகத்தின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்கின்ற கம்பீரத்துடன் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு விழா!

பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக, அவருடைய படத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம் இது! மனித உரிமையின் அடையாளம்! உலக அடையாளம்! அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாகும்!

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!

சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திமுக தலைவர் பொறுப்பில் இருக்கின்ற எனக்கு, இதைவிடப் பெருமை எதுவும் இருக்க முடியாது.

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்கு பெருமையாக இருக்கிறது!

ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை!

இங்கிலாந்தில் இருக்கின்ற செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

1983 செப்டம்பர் 21-ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியில், தமிழர் தலைவர் வீரமணி கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது! 

தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை!. உலகத்தில் எந்த அகராதியை கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார். ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றிப் பெற்றிடுவான் என்று சொன்னார்.

அதுமட்டுமல்ல, “உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். 

மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார். 

அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியும், மனநிறைவும் நான் பெறுகிறேன்.

தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன், எம்ஐடிஎஸ் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி, பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆய்வு செய்த பேராசிரியர்  எஸ்.ஆனந்தி இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார்கள்.

இந்த விழாவுக்கு மகுடம் சேர்க்கின்றது போல, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி, முனைவர் கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து உருவாக்கியிருக்கக்கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூல் வெளியீட்டு விழா அமைந்திருக்கிறது. இதை வெளியிடுகின்ற பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கிறது!

இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுடைய முயற்சியால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதன் அடையாளம்தான் இது!

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்! பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய அடிப்படைகள் என்னவென்றால் – சுயமரியாதை,  பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, இரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதசார்பற்ற அரசியல்,  அறிவியல் மனப்பான்மை என்று பெரியாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பரந்து விரிந்த அறிவுக்கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க, இந்த அறிமுகம் நிச்சயம் பயன்படும்!

இந்தச் சிந்தனைகளின் அடிப்படையிலான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாக, ஆறு குறிப்புகளை,குடிஅரசு இதழில் பெரியார் எழுதினார். அவற்றைச் நான் சொல்லவேண்டும் என்றால், முதலில், சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வும் இருக்கக் கூடாது. இரண்டாவது, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்கவேண்டும். மூன்றாவது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். நான்காவது, சாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகியவை இல்லாத மனித சமூக ஒற்றுமை நிலவ வேண்டும். ஐந்தாவது, அனைத்து மனிதரும் உழைத்து அதன் பயனை அனைவரும் சமமாக பயன்படுத்த வேண்டும். ஆறாவது, யாரும் எதற்கும் அடிமை ஆகாமல், அவரவர் அறிவு – ஆராய்ச்சி – உணர்ச்சி –  காட்சி ஆகியவற்றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொதுவான கருத்தியல்கள்! அதனால்தான் பெரியார் கொள்கை, உலகளாவிய கொள்கை என்று சொல்கிறோம்.

இவ்வளவு முற்போக்கான கருத்தியல்களை, நூறு ஆண்டுகளுக்கும் முன்பே, அதுவும் பழமைவாதங்களும், மூடநம்பிக்கைகளும் நிரம்பியிருக்கின்ற மண்ணில் பேசி, மக்களை எழுச்சிப் பெற வைத்தவர் தந்தை பெரியார்!

சுயமரியாதை இயக்கத்தை அவர் சாதாரணமாக தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்தார். உலகம் எப்படி இருக்கிறது அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சொன்னார்! தமிழ்நாடும் தலைநிமிர்ந்தது! அதனால்தான் அவர் தந்தை பெரியார்!

தந்தை பெரியாரின் உலகப் பயணங்களை சுருக்கமாக பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் என்றால், 1929-ல் – மலேசியா, சிங்கப்பூருக்கும் – 1932-ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழுவதும் பயணம் செய்தார்.

அப்போது, இந்த இங்கிலாந்து நாட்டில், ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார். இங்கேதான், கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் எழுதிய ‘மதம்’ என்ற நூலை வாங்கினார்.

இங்கே இருக்கின்ற பார்ன்ஸ்லே-வில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலாக பேசினார். அந்தக் கூட்டத்தில் இருந்த நிறைய பேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவர்கள். அப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழிலாளர் நட்பு ஆட்சியை நடத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் தொழிலாளர்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறீர்கள்” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்த துணிச்சல்தான் தந்தை பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என்று எல்லோராலும் நினைக்கப்படுகிறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!

அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னாலும், உன் புத்திக்கு சரி என்று பட்டது ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு” என்று சொன்னார் தந்தை பெரியார்.

வெறும் நம்பிக்கையை கண்டுப்பிடிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லி, எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார். எல்லாவற்றுக்கும் விடையை கண்டுப்பிடிக்க வேண்டும். எதையும் லாஜிக்கலாக அணுகவேண்டும். இந்த அறிவியல் சிந்தனையைத்தான் பரப்பினார்; அறிவியல் மனப்பான்மையைத்தான் அவர் விதைத்தார்.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அத்தனை அறிவியல் மாற்றங்களையும், ‘இனிவரும் உலகம்’ என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.  அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.

சுயமரியாதை இயக்கத்தை 1925-ஆம் ஆண்டு தொடங்கினாலும், சுயமரியாதைச் சிந்தனையானது பெரியாருக்கு இளமைக் காலத்திலேயே வந்துவிட்டது. அவர் அப்போதே அப்படித்தான்!  அவருடைய லைஃப் ஹிஸ்டரியை கொஞ்சம் பார்த்தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்சிகள் புரியும்! ஆதிக்க சாதியினர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் அவமானப்படுத்தப்பட்டதும், தாழ்த்தப்பட்டோர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் சொந்த வீட்டில் அவமானப்படுத்தப்பட்டதும் சிறிய வயதிலேயே அவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 

பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயதிலேயே, 13 வயது பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்துவிட்டார். மறுமணத்துக்கு குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதையெல்லாம் மீறி, அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைத்தார். மாற்று சமூகத்தினரின் காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்தார். தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கினார்.

நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த பெரியார், அப்போதும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் எல்லோருக்கும் சமமான உணவு தரப்படவேண்டும், வைக்கத்தில் எல்லோரையும் கோயில் தெருவிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். 

இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டது. அங்கேயும் உயர் சாதியினரின் ஆதிக்கம் இருப்பதைப் பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவை என்று அதிலிருந்து அவர் வெளியேறினார். அப்படி உருவானதுதான், இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற சுயமரியாதை இயக்கம்!

சமூகநீதி – பெண்களுக்கு சொத்துரிமை – தீண்டாமை ஒழிப்பு – பொது இடங்களில் பட்டியலினத்தவருக்கு தடை இருக்கக் கூடாது – நில உரிமை – கைம்பெண் மறுமணம் – தமிழுக்கு முக்கியத்துவம் – சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு – இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்.

இந்தக் கொள்கைகளுக்காக பெரியார் அலைந்த அலைச்சல் நினைத்தே பார்க்க முடியாதது, யாரும் அலையாதது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்றூர்களில், பெரியார் பேசி இருக்கிறார்.  16.2.1962 அன்று மட்டும் 19 கூட்டங்களில் பெரியார் பேசி இருக்கிறார். அதுவும் அப்போது அவருக்கு என்ன வயது? 82 வயது! 82 வயதிலும் பேசியிருக்கிறார்! 95 வயதிலும் 98 நாட்கள் அலைந்திருக்கிறார் தந்தை பெரியார்.

நம்முடைய மண்ணில் வாழுகின்ற மனிதர்களை மானமும், அறிவும் உள்ள சுயமரியாதைமிக்க மக்களாக்கத்தான் அவர் ஓயாமல் உழைத்தார்.  உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் இல்லாத பெருமையும், புகழும் பெரியார் இயக்கத்துக்கு உண்டு. பெரியாரின் இந்த சாதனைகள் எல்லாம், ஆயுதம் தாங்காத புரட்சிகள்! இரத்தம் சிந்தாத புரட்சிகள்!. அவருடைய சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம், சட்டங்கள் ஆவதை பார்த்த பெருமை பெரியாருக்கே உண்டானது! இது உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழ்!

உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை, சீர்திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறது! எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குகின்ற ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள். நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சிப் பெற்று, வெகுசன மக்களை கன்வின்ஸ் செய்து, அவர்களுடைய ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வைத்திருக்கிறது.

சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று  பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை,

அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று  பெரியார் சொன்னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி. பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும் என கூறினார்.

Related posts

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல..வெறும் 0 தான்: ஈபிஎஸ் விமர்சனம்

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த ஈபிஎஸ்!

முதியோருக்கு மாதம் ரூ.2,000; அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!