புதுடெல்லி, ஜூலை 16:
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 21-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மாநிலங்களவை தலைவர் மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நேரில் சந்தித்து விவாதித்தார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஒரு மாத காலமாக நடைபெற உள்ளது. இதில் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும், இந்த கூட்டத்தொடரில் முதல் முறையாக எம்.பி.க்கள் வருகைப்பதிவை தங்களது இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள கையடக்க கணினி (டிஜிட்டல்) மூலம் பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, “மாநிலங்களவை தலைவரை சந்தித்து முக்கியமான அரசியல், வெளியுறவு கொள்கை மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து உரையாடினோம். வரவிருக்கும் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.