டெல்லி, ஜூலை 23:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இரு அவைகளிலும் பரபரப்பாக தொடர்கிறது. கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால், மக்களவையும் மாநிலங்களவையும் 3-வது நாளாக முடங்கியது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவைத் தலைவர்கள் மறுத்தனர். அதற்குப் பின்னர், அவைகளில் விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளபோதும், எதிர்க்கட்சியினர் அமளியை தொடர்ந்ததால் நேற்று முழுவதும் அவைகள் செயல்பட முடியவில்லை.
இன்று காலை அவைகள் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் கூடிய அவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. “இந்த அவை விவாதமும் உரையாடலுக்குமான இடம். கோஷமிடுவதற்காக அல்ல. அவையின் கண்ணியத்தை பின்பற்றுங்கள்,” என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்தார்.
அதேசமயம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் இயங்கும் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளது.