நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்: பேரிடர் மீட்பு படை நெல்லைக்கு விரைந்தது

Cyclone Titva: NDRF rushed to 6 districts

நெல்லை, நவம்பர் 24:

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அரசின் பேரிடர் மீட்பு படை குழுவினர் நெல்லைக்கு விரைந்துள்ளனர்.

மொத்தம் 26 வீரர்கள் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழு அண்ணா விளையாட்டு மைதானத்தில் முகாமிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால் உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 28 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவும் முழு முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தயாராகி உள்ளது. இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை கருப்பந்துறை, மேலநத்தம், சீவலப்பேரி, குப்பக்குறிச்சி சிப்காட் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு நிலவுவதால், வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைக்கேற்ப தடுப்புகள், கயிறுகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நிரம்பிய நிலையில் உள்ள நீர்நிலைகளின் அருகே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது அதன் அருகே சென்று செல்பி எடுக்கவோ, குளிக்கவோ வேண்டாம். மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளதால் மெழுகுவர்த்தி, டார்ச் லைட் ஆகியவற்றை மக்கள் தயார் நிலையில் வைத்து கொள்வது அவசியம்.

மழை பெய்யும்போது பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சமடைய வேண்டாம். துண்டித்து விழுந்த மின்கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் 1077 மற்றும் 0461- 2501070 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வணக்கம் நெல்லை 97865-66111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். ‘டி.என். அலார்ட்’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதன் மூலம் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை