ராமநாதபுரம், அக்டோபர் 30:
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொனில் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் இருவரும் மதுரையிலிருந்து ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணம் மேற்கொண்டனர். அப்போது பசும்பொனுக்கு செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் மூவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், மூவரும் ஒரே நேரத்தில் பசும்பொனில் தேவரின் நினைவிடத்தை அடைந்து, முத்துராமலிங்கத் தேவரின் நினைவுச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் பொதுவெளியில் ஒன்றாகக் காணப்பட்டிருக்கின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய மாற்றத்திற்கான எடுத்துக்காடாக கருதப்படுகிறது.