டெல்லி, ஆகஸ்ட் 11:
தேர்தலை ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ராகுல் காந்தி மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகளை ஆதாரங்களுடன் பொதுவெளியில் வெளிப்படுத்தி தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரின் அறிவுறுத்தலை எம்.பி.க்கள் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்த போராட்டம் அரசியல் விஷயம் அல்ல, இது நாட்டின் அரசியலமைப்பைக் பாதுகாத்துக்கொள்ளும் போராட்டம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் நம் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.எங்களுக்கு தேவை சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லி காவல் அதிகாரி தெரிவித்தபடி, “பேரணி செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் காவல்துறையினர் தடுப்பு ஏற்படுத்தினர். கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்காக வருகின்றனர். தேர்தல் ஆணையம் 30 எம்.பிகளை சந்திக்க அனுமதித்துள்ளது, அவர்கள் பட்டியலை அளித்தால் மட்டுமே 30 பேர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அழைக்கப்படும். தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது.”