டெல்லி, ஜூலை 21:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அம்சங்களுக்கு தொடர்பான முக்கிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் சம்பவங்கள் குறித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் விரிவாக ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, விதி எண் 267-ன் கீழ் இந்த விவகாரங்களை அவையில் எழுப்பினார். “ஆபரேஷன் சிந்தூரில் என்ன நடந்தது? இதுவரை பயங்கரவாதிகளை பிடிக்கவோ, கொல்லவோ முடியவில்லை. எல்லா கட்சிகளும் தேசிய பாதுகாப்பில் அரசு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றன. ஆனால், அரசு நடந்ததை தெளிவாக விளக்க வேண்டும்,” என்று கார்கே வலியுறுத்தினார்.
மேலும், ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநர் உளவுத்துறை தோல்வி குறித்து அறிவிக்கிறார்; அமெரிக்க அதிபர் டிரம்பும் ‘தான் தான் மோதலை நிறுத்த வைத்தேன்’ என பலமுறை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பாஜக மாநிலங்களவை தலைவர் ஜெ.பி. நட்டா, “மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய தேசிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான பதிலை வழங்க தயாராக உள்ளோம்,” என்று தெரிவித்தார்.