திருப்பூர், மார்ச் 31:
திருப்பூரில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க. நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் நல்லாட்சி அமைய திரையுலகத்தில் உச்சத்தை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் நினைப்பதை நிறைவேற்ற களம் இறங்கி உள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் தான் முடியும். அந்த கருத்தின் அடிப்படையில், எதிர்கால தமிழகத்தை உருவாக்க சோதனைகளை தாண்டி வெற்றி இலக்கை எட்டி விட்டோம். அ.தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஓட்டு வீணானது. அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியாது. ஓட்டுப்பதிவு நாளான 23-ந்தேதி காலை 4 மணிக்கே மக்கள் த.வெ.க. வுக்கு ஓட்டுப்போட வந்து விடுவார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது 10 மணிக்கு வெற்றி பெற்றுவிட்டோம் என்ற செய்தி வந்துவிடும்.
த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு, வேட்பாளர் அறிமுகத்துக்கு தடை, உள்ளரங்க கூட்டத்துக்கு தடை என வருகிறது. ஆனால் தி.மு.க.வினரின் கூட்டம், ரோடு-ஷோவுக்கு தடையில்லை. எங்களுக்கு மட்டும் 51 விதிகளை காட்டி மக்களை சந்திக்க விடாமல் செய்கின்றனர். விஜய்யின் சுற்றுப்பயணம் மாற்றத்தை உருவாக்கும்.
1991-ல் ஜெயலலிதா பர்கூர், காங்கயம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதேபோல் விஜய்யும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். புதிதாக களம் காணும்போது, ஆட்சியாளர்களால் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தலைவர்கள் 2 இடங்களில் போட்டியிடுவது வழக்கம்தான் என்று அவர் கூறினார்.

