லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 16:
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028 போட்டியில், 128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் இடம் பெற்றுள்ளது. கிரிக்கெட் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (IOC) இன்று வெளியிட்டது.
அதன்படி, T20 வடிவம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி தொடங்கி, ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்க ஆட்டமாக, பெண்கள் கிரிக்கெட் இறுதி ஜூலை 20-ம் தேதியும், ஆண்கள் இறுதி ஜூலை 29-ம் தேதியும் நடக்க உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி காலை 7 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் ஐசிசி T20 தரவரிசையில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் தகுதி பெறும். அனைத்து போட்டிகளும் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக் தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1900ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மட்டுமே இடம்பெற்ற கிரிக்கெட், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் நடக்க இருப்பது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.