சென்னை, ஜூலை 4:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், முதல்வர் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.
மேலும், ரூ. 103.38 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 52 புதிய கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதில் 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டிடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடங்கும்.
இதனுடன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்காக மஹதி கடலூர் போர்ட் அண்ட் மெரிடைம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.