சென்னை, டிசம்பர் 23:
சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல; அதன் முடிவுகள் பா.ம.க.வை கட்டுப்படுத்தாது என்று அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் சேலத்தில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதில், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல: அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என்று பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அன்புமணி தரப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29 ஆம் தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.