சென்னை, ஆகஸ்ட் 18:
தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப் போலவே தவெகவின் கொடியும் உள்ளதாக கூறி, தவெகவின கொடியைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நடந்த விசாரணையில், இரு கொடிகளையும் ஒரே மாதிரியானவைகளாகக் கூற முடியாது என்றும், இரண்டையும் பயன்படுத்தியாலும் மக்களிடையே குழப்பு ஏற்படாது என நீதிமன்றம் தெரிவித்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கு தொடர்பாக மனுதாரர் தெரிவித்ததாவது: 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு பதிவுத்துறையில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடி பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே அந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை பெற்றுள்ளனர். வேறு எந்த நபர்களும் அனுமதி இல்லாமல் அதன் கொடியை பயன்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டது.
எனவே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் சிகப்பு, மஞ்சள், சிகப்பு வண்ணங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை 17 ஆம் தேதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு மட்டுமின்றி சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கும் வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.